கனடாவின் வின்ட்சரில் வரலாறு காணாத அளவில் 46 கிலோ பெண்டனில் கைப்பற்றல்! – 6.5 மில்லியன் கனேடிய டொலர் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்!

images 1 5

கனடாவின் வின்ட்சர் (Windsor) நகரில் நடைபெற்ற விசேட நடவடிக்கையின் போது, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான பெண்டனில் (Fentanyl) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெற்கு ஒன்டாரியோ பகுதியில் உள்ள பல முகவரிகள் மற்றும் வாகனங்களில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 46 கிலோகிராம் பெண்டனில் மருந்துகள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட இந்த பெண்டனில், சுமார் 460,000 தெரு அளவிலான மருந்துகளுக்கு சமமானது என்றும், இது ஒரு மிதமான அளவிலான மக்களின் உயிரைப் பறிக்கும் திறன் கொண்டது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட பெண்டனில் தவிர, கொகெய்ன், ஹெரோயின், துப்பாக்கிகள், பணம், தொலைபேசிகள், நகைகள் மற்றும் பிற போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 6.5 மில்லியன் கனேடிய டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் வின்ட்சர் நகரத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவரும், வாங்கூவர் நகரத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி வின்ட்சர் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒன்ராறியோ மாகாண காவல்துறை பணிப்பாளர் தாமஸ் காரிக் தெரிவிக்கையில், பெண்டனில் கடத்தலைத் தடுக்க மாகாணம் முழுவதும் காவல்துறை இணைந்து பணியாற்றுகிறது என்றும், இந்த நடவடிக்கை மூலம் நகரில் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்றும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Exit mobile version