புதிய சர்ச்சைக்கு நடுவே கனடாவில் இளவரசர் ஹரியும் மேகனும்

tamilni 331

புதிய சர்ச்சைக்கு நடுவே கனடாவில் இளவரசர் ஹரியும் மேகனும்

பிரித்தானியாவும் வேண்டாம், ராஜ குடும்பமும் வேண்டாம் என வீறாப்பாய் வெளியே வந்தும், மீண்டும் தங்கள் ராஜ குடும்ப பட்டங்களை பயன்படுத்தியதால் இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்கள்.

ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறியதால், வருவாய்க்காக பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறார்கள் இளவரசர் ஹரியும் மேகனும். மலைபோல் நம்பியிருந்த பல நிறுவனங்கள் கைவிட, அடுத்த முயற்சியாக, ராஜ குடும்பப் பெயரையே பயன்படுத்தி இணையதளம் ஒன்றை புதிதாக துவங்கியுள்ளார்கள் ஹரி மேகன் தம்பதியர்.

தங்கள் இணையதளத்துக்கு அவர்கள் Sussexes.com என பெயர் வைக்க, ராஜ குடும்பம் வேண்டாம், ராஜ குடும்ப பொறுப்புகளை செய்யமாட்டோம் என ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறிவிட்டு, இப்போது ராஜ குடும்ப பட்டமான Sussex என்பதை மட்டும் எப்படி ஹரியும் மேகனும் தங்கள் இணையதளத்துக்கு பயன்படுத்தலாம் என்னும் ரீதியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனால், Sussex என்பது ஹரி, மேகனுடைய பெயரில் ஒரு பகுதி, அது அவர்களுடைய குடும்பப் பெயர் என்றும், அதைப் பயன்படுத்துவது அவர்களுடைய உரிமை என்றும், தம்பதியருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சர்ச்சைகள் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க, ஹரியும் மேகனும் கைகளைப் பிடித்துக்கொண்டு கனடாவில் காணப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதாவது, போரில் கை கால்களை இழந்த ராணுவ வீரர், வீராங்கனைகளுக்காக இளவரசர் ஹரி துவங்கிய இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகள், கனடாவின் வான்கூவரில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளன. அது தொடர்பாகத்தான் ஹரியும் மேகனும் கனடா வந்துள்ளார்கள்.

ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறியதும் ஹரியும் மேகனும் முதலில் கனடாவுக்குதான் வந்தார்கள். ஆனால், கனடாவில் அவர்கள் வாழும்போது, அவர்களுடைய பாதுகாப்புக்கான செலவுகளை யார் பொறுப்பேற்பது என்பது குறித்து சர்ச்சை உருவானது.

அது மட்டுமல்ல, அது எங்கள் வீடு அல்ல, யாரோ ஒருவருடைய வீடு என்றும் அப்போது கூறியிருந்தார் ஹரி. அதைத் தொடர்ந்துதான் ஹரி குடும்பம் அமெரிக்காவில் குடியேற முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version