இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் இன்று (டிசம்பர் 4) மாலை இந்தியத் தலைநகர் டெல்லியை வந்தடைந்தார்.
டெல்லி வந்தடைந்த ஜனாதிபதி புட்டினை இந்தியப் பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு, பிரதமர் மோடி தனது இல்லத்தில் தனிப்பட்ட இரவு விருந்து அளிக்கிறார்.
நாளை (டிசம்5) காலை ஜனாதிபதி மாளிகையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு முப்படை வீரர்களின் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
ஐதராபாத் இல்லத்தில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின், பிரதமர் மோடியுடன் கலந்துகொள்கிறார்.
மாநாட்டுக்கு இடையே மோடி-புட்டின் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விவாதிக்கப்படும். விவாதங்களின் முடிவில் இரு தலைவர்களும் இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளனர்.