பிரான்ஸில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக இமானுவேல் மேக்ரான் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதியாகப் பதவி வகித்து வரும் இமானுவேல் மேக்ரானின் பதவி காலம் முடிவடைந்ததையடுத்து 12ஆவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கு இரண்டு சுற்று தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நதாலி ஆர்தாட், நிக்கோலஸ் டூபோன்ட், ஆன் ஹிடால்கோ, யானிக்ஜடோட், ஜீன்லஸ்ஸல், மரைன் லி பென் உட்பட 12 பேர் களமிறங்கினர். பிரான்ஸின் அரசமைப்பு சட்டப்படி இரண்டு சுற்று தேர்தல் மூலம் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவது வழக்கம்.
இதன்படி பிரான்ஸில் முதல் சுற்று ஜனாதிபதித் தேர்தல் கடந்த 10ஆம் திகதி நடந்தது. 4.90 கோடி வாக்காளர்களுக்காகப் பல்லாயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். இமானுவேல் மேக்ரானுக்கும், வலதுசாரி வேட்பாளரும் பெண் வக்கீலுமான மரைன் லு பென்னுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முதல் சுற்று தேர்தலில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை.
இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் கட்டம் நேற்று நடைபெற்றது. காலை முதல் மாலை வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதில் மேக்ரான் 58 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மரைன் லு பென் 42 சதவீதம் வாக்குகள் பெற்றார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இமானுவல் மேக்ரானுக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக இமானுவேல் மேக்ரான் கடந்த 2017 முதல் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக இருந்து வருகின்றார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைகின்றது. இந்தச் சூழலில் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் வெற்றிவாகை சூடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#WorldNews
Leave a comment