ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
நப்லூஸில் உள்ள லுபான் அல் ஷர்கியா கிராமத்திற்கு அருகே, இஸ்ரேலியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலஸ்தீன இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பிரதான வீதியில் கற்களை எறிந்தவர்கள் மீது இந்தச் சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. அவர்கள் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும், பதுங்கியிருந்து தாக்குதல் நடத்துவதற்காகவே கற்களை எறிந்ததாகவும் இராணுவம் நியாயம் கற்பித்துள்ளது.
இதில் 26 வயதான கத்தாப் அல் சர்ஹான் என்ற இளைஞர் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகப் பலஸ்தீன நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து லுபான் அல் ஷர்கியா கிராமத்திற்கான பிரதான நுழைவாயில்கள் மற்றும் பல வீதிகளை இஸ்ரேலியப் படை மூடி முடக்கியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த போதிலும், இஸ்ரேல் அதனைத் தொடர்ந்து மீறி வருவதாகப் பலஸ்தீனர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தெற்கு காசாவின் ரபா (Rafah) நகரில் நேற்று இஸ்ரேலிய வான்படை மற்றும் பீரங்கிகள் மூலம் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் அப்பகுதியில் பெரும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அனடொலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காசாவின் 50 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளை இஸ்ரேல் இப்போதும் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளது. போர் நிறுத்தத்திற்குப் பின்னரான இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 418 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 1,110 பேர் காயமடைந்துள்ளதாகக் காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
2023 அக்டோபரில் போர் வெடித்தது முதல் மேற்குக் கரையில் மட்டும் இஸ்ரேலியப் படைகள் மற்றும் குடியேற்றவாசிகளின் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

