சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் பிப்ரவரி 15-ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் டி20 உலகக் கிண்ணப் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது. முன்னதாக, சில அரசியல் காரணங்களால் இந்தப் போட்டியைப் புறக்கணிக்கப் பாகிஸ்தான் அரசுபரிசீலித்து வந்த நிலையில், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருக்கு இடையே நேற்று (பிப்ரவரி 9, 2026) மாலை இடம்பெற்ற விசேட தொலைபேசி உரையாடல் இந்தப் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
இந்தத் தொலைபேசி உரையாடலின் போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மிகவும் உணர்வுப்பூர்வமான ஒரு கோரிக்கையைப் பாகிஸ்தான் பிரதமரிடம் முன்வைத்தார். “இலங்கை பயங்கரவாதத்தால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், உலக நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு வரத் தயங்கியபோது, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மட்டுமே துணிச்சலுடன் இங்கு வந்து விளையாடி எங்களது கிரிக்கெட்டைப் பாதுகாத்தது” என்பதை அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நீண்டகால நட்புறவு மற்றனைத்து அரசியல் விடயங்களையும் விட மேலானது என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஜனாதிபதி அநுரவின் இந்தச் சுமூகமான மற்றும் நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பிப்ரவரி 15-ஆம் திகதி இந்திய அணியுடன் நடைபெறவுள்ள போட்டியில் பாகிஸ்தான் அணி களமிறங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (PCB) தலைவருக்குப் பிரதமர் நேரடி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். கிரிக்கெட் விளையாட்டின் உன்னதத்தைப் பாதுகாக்கவும், உலகளாவிய இந்த விளையாட்டைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும் பாகிஸ்தான் எப்போதும் துணை நிற்கும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த அதிரடித் திருப்பத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பாகிஸ்தான் பிரதமருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். “1996-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் போது இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை இலங்கை இன்னும் மறக்கவில்லை” என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்தத் தொடரின் இணை நடத்துனர் என்ற வகையில், சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும் (ICC) இதற்கு ஆதரவளித்த அனைத்து நட்பு நாடுகளுக்கும் இலங்கை தனது நன்றியை உரித்தாக்கியுள்ளது.
இந்தத் தீர்மானமானது கிரிக்கெட் உலகிற்கு மட்டுமல்லாது, இலங்கையின் சுற்றுலாத் துறைக்கும் பெரும் புத்துயிரை அளித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி ரத்து செய்யப்பட்டிருந்தால், இலங்கை கிரிக்கெட் சபைக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கொழும்பு நகரம் இந்த ‘மெகா’ போட்டியை வரவேற்கப் புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது. மைதானத்தில் நிலவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் டிக்கெட் விற்பனை குறித்து ரசிகர்கள் இப்போதே ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.