சட்டையை விலக்கி தழும்பைக் காட்டும் நிலைக்கு ஆளாக்கப்பட்ட பெண்: மோசமான நடவடிக்கை!
கனடாவில் விமானத்தில் பயணிப்பதற்காக சென்ற ஒரு பெண், பாதுகாப்பு அதிகாரிகளிடம் தன் சட்டையை விலக்கி தன் உடலில் உள்ள தழும்பைக் காட்டும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
எல்லா நாடுகளிலும், எல்லா இடங்களிலும் அறியாமையும் கூடவே அகங்காரமும் கொண்ட அதிகாரிகள் சிலராவது இருப்பார்கள் போலிருக்கிறது.
அப்படிப்பட்ட ஒருவரிடம் தன் சட்டையை விலக்கி தன் உடலில் உள்ள தழும்பைக் காட்டும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் கனேடிய பெண் ஒருவர்.
ஒன்ராறியோவைச் சேர்ந்த Marion Howell (62), கடந்த வாரம் New Brunswick சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக விமான நிலையம் சென்றுள்ளார்.
அவர் இதயப் பிரச்சினை காரணமாக பேஸ் மேக்கர் கருவி பொருத்தியுள்ளார். அதனால், மெட்டல் டிடெக்டர் கருவி வழியாக அவர் செல்வது அவரது உடல் நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
இந்த விடயத்தை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறி, தன்னால் மெட்டல் டிடெக்டர் கருவி சோதனைக்குட்பட முடியாது. ஆகவே, பெண் பாதுகாவலர் ஒருவர் தன் உடலை பரிசோதிக்கட்டும் என்று கூறியுள்ளார் அவர்.
ஆனால், பெண் பாதுகாவலர்கள் யாரும் இல்லை என்று கூறிய ஒரு ஆண் பாதுகாவலர், வேண்டுமென்றால் ஆண் பாதுகாவலர் சோதிக்க அனுமதியுங்கள், இல்லையென்றால், விமானத்தை மிஸ் பண்ணவேண்டியிருக்கும் என கூறியிருக்கிறார்.
வேறு வழியில்லாமல், தன் சட்டையை விலக்கி, தன் மார்புப் பகுதியில் பேஸ் மேக்கர் பொருத்தப்பட்ட தழும்பைக் காட்டும் நிலைக்கு ஆளாகியுள்ளார் Marion.
ஆனாலும், தன் சகோதரியின் மேற்பார்வையில் ஆண் பாதுகாவலர் ஒருவர் Marionஐ சோதனை செய்வதென முடிவாகியுள்ளது.
சோதனை முடிந்தும் Marionக்கு பிரச்சினை முடியவில்லை. சற்று தொலைவில் காத்திருந்த கனேடிய பொலிசார் அவரை தனியாக அழைத்து, அவர் விமான நிலைய பரிசோதனைக்கு மறுத்ததாக குற்றம் சாட்டினார்களாம். நான் பரிசோதனைக்கு மறுக்கவில்லை, ஆண் ஒருவர் என்னை பரிசோதனை செய்வதற்கு மறுப்பு தெரிவித்தேன், இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது என்று அவர்களிடம் கூறியுள்ளார் Marion.
கண்ணீர் சிந்தும் நிலைமைக்கு ஆளான Marion, விமானத்திலிருந்து இறங்கியதும், முறைப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். இவ்வளவு அநாகரீகத்துக்கும் பின், ஊடகவியலாளர்கள் நடந்ததைக் குறித்து விசாரிக்க, வழக்கம்போல தனியுரிமை கருதி அந்த சம்பவம் குறித்து பேச முடியாது என்று கூறியுள்ளார்கள் விமான நிலைய அதிகாரிகள். எல்லாருக்கும் இப்படி ஒரு நல்ல சாக்குப்போக்கு கிடைத்திருக்கிறது, தவறு செய்துவிட்டு விளக்கமளிக்காமல் தப்பிக்கொள்வதற்கு!