2023ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசை வென்ற மனித உரிமைப் போராளியான நர்கெஸ் முகமதியை (Narges Mohammadi), ஈரானியப் பாதுகாப்புப் படையினர் நேற்று (டிசம்பர் 12) தலைநகர் டெஹ்ரானில் கைது செய்துள்ளனர். அண்மையில் காலமான ஒரு வழக்கறிஞரின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் டெஹ்ரானுக்குச் சென்றபோது இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் அதிகாரிகள் நர்கெஸ் முகமதியை பலவந்தமாகப் பிடித்துச் சென்றதாக அவருடைய ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளதுடன், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஐ.நா சபை உட்படப் பல்வேறு சர்வதேச அமைப்புகள் ஈரான் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.
நர்கெஸ் முகமதி, ஈரானில் பல ஆண்டுகளாகப் பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராகத் தொடர்ந்து போராடி வருபவர்.
பெண்களின் உரிமைகளைப் பறிக்கும் கட்டாய ஹிஜாப் சட்டங்களுக்கு எதிராகக் குரல் எழுப்புதல்.
‘பெண், வாழ்வு, சுதந்திரம்’ என்ற இயக்கத்தின் முக்கியப் பங்களிப்பாளர்களில் ஒருவராகச் செயற்படுதல். அவருடைய மனித உரிமைகளுக்கான சேவையைப் போற்றும் விதமாகவே, அவருக்கு கடந்த 2023ஆம் ஆண்டு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நேரத்தில் கூட, அவர் சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தார். அவர் சிறையில் இருந்தபடி, ஈரான் அரசுக்கு எதிராக எழுதிய கட்டுரைகளும் உலக அளவில் கவனத்தை ஈர்த்தன.
நர்கெஸ் முகமதி இதுவரை 10 இற்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவர் மொத்தமாக 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 154 சவுக்கடி தண்டனைக்கு ஆளாகியுள்ளார். தற்போது அவர் சிறைக்குச் செல்லாமல் பிணையில் இருந்த நிலையிலேயே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.