நடந்து முடிந்த இந்தியப் பீகார் சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார், 10ஆவது முறையாகப் பீகார் முதல்வராகப் பதவியேற்றது சர்வதேச அரங்குகளில் பேசுபொருளாகியுள்ளது.
லண்டனில் உள்ள உலக சாதனைப் புத்தகத்தில் (World Book of Records) நிதிஷ் குமாரின் பெயரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பெயரும் இடம்பிடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“இந்தியாவின் மாநிலமொன்றின் முதல்வராக 10ஆவது முறையாகப் பதவியேற்ற ஒரே நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளதாக அங்கீகரித்து, நிதிஷ் குமார் உலக சாதனைப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார்,” என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியச் செயல் தலைவர் சஞ்சய்குமார் தெரிவித்துள்ளார்.
நிதிஷ் குமார் கடந்த 2005ஆம் ஆண்டு முதல், 20 வருடங்களாக அவர் பீகார் முதல்வர் பதவியில் நீடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.