லண்டனில் புத்தாண்டு இரவில் கொல்லப்பட்ட 16 வயது சிறுவனின் பெயரை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 11.40 மணியளவில் லண்டனின் ப்ரிம்ரோஸ் மலைப் பகுதியில் அனைவரும் புத்தாண்டை வரவேற்க காத்து கொண்டு இருந்த வேளையில், 16 வயது சிறுவன் கத்தியால் குத்தி தாக்கப்பட்டு இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சிறுவனை மீட்டு தேவையான முதலுதவி சிகிச்சைகளை செய்தனர்.
ஆனால் துரதிஷ்டவசமாக சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் புத்தாண்டு இரவில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சிறுவனின் பெயர் ஹரி பிட்மேன் என்று பொலிஸார் தரப்பு தெரிவித்துள்ளது.
ஹரி பிட்மேன் தன்னுடைய நண்பர்களுடன் புத்தாண்டை வரவேற்பதற்காக ப்ரிம்ரோஸ் மலைப் பகுதியில் இருந்துள்ளார், அப்போது ஹரி பிட்மேன் தீவிரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் விளைவாக மிகவும் மோசமான விளைவுகள் ஏற்பட்டு இருக்கலாம் என நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்கு இடமான 16 வயது சிறுவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர் தற்போது வடக்கு லண்டன் காவல் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.