புலம்பெயர்ந்தோரை கடத்தும் கும்பல்: ஜேர்மனியில் இருவர் கைது
ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் புலம்பெயர்ந்தோரைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த இருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஜேர்மன் தலைநகர் பெர்லினில் ஆறு இடங்களிலும், Lower Saxonyயில் எட்டு இடங்களிலும், சுமார் 260 அதிகாரிகள் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தொடர்பில் ரெய்டுகள் நடத்தினார்கள்.
அதைத் தொடர்ந்து, நேற்று, அதாவது வியாழக்கிழமை, இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களில், 23 வயது நபர் ஒருவர் பெர்லினைச் சேர்ந்தவர், Garbsen என்னுமிடத்தில் அவர் கைது செய்யப்பட்டார். மற்றவர் 40 வயது நபர், அவர் Lehrte என்னுமிடத்தில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள், ஆட்கடத்தல் கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அந்தக் கடத்தல் கும்பலில் பலர் ஈராக்கியர்கள். அவர்கள் 208 புலம்பெயர்வோரை, பெரும்பாலும் சிரியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் கடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த புலம்பெயர்வோர், ஆளுக்கு 4,000 முதல் 5,000 யூரோக்கள் வரை கடத்தல்காரர்களுக்கு செலுத்தியுள்ளார்கள். ஆனாலும், கடத்தல்காரர்கள் அந்த புலம்பெயர்வோரை மனிதர்கள் பயணிப்பதற்கு உகந்ததல்லாத வாகனங்களில் ஆடுமாடுகளைப் போல அடைத்துக்கொண்டு வந்துள்ளார்கள். வழியில் அவர்களுக்கு உணவோ ஓய்வோ கூட கொடுக்கப்படவில்லையாம்.
அந்தப் புலம்பெயர்வோர், ஹங்கேரி, ஆஸ்திரியா, செக் குடியரசு வழியாக ஜேர்மனிக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்கள்.
சமீபத்தில் ஜேர்மனி, போலந்து, செக் குடியரசு மற்றும் சுவிட்சர்லாந்துடனான தனது எல்லைகளில் சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் சோதனைகள் மேற்கொள்ளத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.