தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் (Cape Town) நகரில் மர்மக் கும்பல் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நவீன ரக துப்பாக்கிகளுடன் வந்த ஒரு கும்பல் திடீரென இந்தத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த மூவர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் மிரட்டிப் பணம் பறித்தல் (Extortion) அல்லது அதனுடன் தொடர்புடைய நிழல் உலகக் கும்பல்களின் மோதலாக இருக்கலாம் என அந்நாட்டு பொலிஸார் முதற்கட்ட விசாரணையில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் சமீபகாலமாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் கை ஓங்கியுள்ளதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான தரவுகளின்படி, அங்கு வன்முறை மற்றும் குற்றச் செயல்கள் காரணமாக தினமும் சராசரியாக 63 பேர் உயிரிழந்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் குழு மோதல்கள் காரணமாக கேப் டவுன் மற்றும் ஜோகன்னஸ்பர்க் போன்ற நகரங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அன்றாட நிகழ்வுகளாக மாறி வருகின்றன.
இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தென்னாப்பிரிக்கப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.