இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு ஈரான், சவுதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வெள்ளை மாளிகைக்கு வருகை தருவதற்கு ஒரு நாள் முன்பு, ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியன் ஒரு கடிதம் மூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், ஈரான் மோதலை நாடவில்லை என்றும், நாட்டின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டால் அணுசக்தி தகராறைத் தீர்க்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி பட்டத்து இளவரசர் அமெரிக்க ஜனாதிபதியைச் சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஈரானின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதா என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
மத்திய கிழக்கில் இருபெரும் பிராந்திய சக்திகளாக இருக்கும் சவுதி அரேபியாவும் ஈரானும் அண்மையில் உறவுகளை மேம்படுத்தி வரும் நிலையில், இந்தக் கோரிக்கை சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

