சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான (IAEA) ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான ஒரு சட்டத்திற்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, தெஹ்ரானின் சேதமடைந்த அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கான எந்தவொரு முயற்சியையும் சர்வதேசத்திடமிருந்து மறைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானின் நாடாளுமன்றம் ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடனான ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான சட்டம் ஒன்றை நிறைவேற்றிய ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை IAEA-வின் ஆய்வுகள் அல்லது கண்காணிப்பு இல்லாமல் மீண்டும் கட்டியெழுப்ப வழி வகுக்கும்.
ஈரானின் திடீர் முடிவு.. சர்வதேசத்திடமிருந்து அணுசக்தி தகவல்களை மறைக்க திட்டம்! | Iran Law On Cooperation With Un
அணுசக்தித் திட்டங்களின் அமைதியான தன்மையை உறுதிப்படுத்த, அணுசக்தி வசதிகளைக் கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் உறுப்பினர்கள் அனுமதிக்க வேண்டும் என்று கோரும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) ஈரான் கையெழுத்திட்டுள்ளது.
கடந்த மாதம் இஸ்ரேல் ஈரான் மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தாக்குதலை நடத்தியது, இதன்போது ஈரானின் இராணுவத் தளபதிகள், அணுசக்தி நிலையங்கள் மற்றும் அதன் அணுசக்தி திட்டத்தை உருவாக்கும் விஞ்ஞானிகள் மீது குறிவைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அமெரிக்கா நடான்ஸ், இஸ்ஃபஹான் மற்றும் ஃபோர்டோவில் உள்ள ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது ஆதரவுத் தாக்குதல்களை மேற்கொண்டது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான 12 நாள் மோதல் கடந்த வாரம் போர்நிறுத்தத்துடன் முடிந்தது. இந்தத் தாக்குதல்களில் தங்கள் அணுசக்தி நிலையங்கள் மோசமாக சேதமடைந்துள்ளதாகவும், ஆனால் அதன் அமைதியான அணுசக்தி திட்டத்தைத் தொடர யுரேனியத்தை செறிவூட்டுவதைத் தொடர விரும்புவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் திட்டத்திற்கு முழுமையான சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றும், தெஹ்ரான் சில மாதங்களில் யுரேனியத்தை செறிவூட்டுவதை மீண்டும் தொடங்கக்கூடும் என்றும் IAEA கூறியது.