சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக் காரணமாகக் காட்டி, கணவர் விவாகரத்து கோரியுள்ள சம்பவம் இணையவாசிகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் 36 வயதுடைய லீ (Li). இவர் ஒரு கடுமையான சரும நோயால் பாதிக்கப்பட்டார். இதன் விளைவாக அவருக்கு அதிகப்படியான முடி கொட்டியதுடன், அவர் தனது வயதை விட முதிர்ச்சியடைந்த தோற்றத்துடன் காணப்பட்டார்.
பொது இடங்களுக்குச் செல்லும்போது அங்கிருந்த சிறுவர்கள் லீயின் தோற்றத்தைக் கண்டு அவரைக் கேலி செய்துள்ளனர்.கடந்த 16 ஆண்டுகளாகத் தனது குடும்பத்திற்காகத் தன்னையே அர்ப்பணித்த லீக்கு, அவர் நோய்வாய்ப்பட்ட போது கணவரிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை.
மனைவிக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய கணவர், அவரைத் தனியே விட்டுவிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களைச் சந்திக்கச் சென்றுள்ளார். லீயை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவோ அல்லது அவரது மருத்துவச் செலவுகளை ஏற்கவோ அவர் முன்வரவில்லை. இறுதியாக, மனைவியின் தோற்ற மாற்றத்தைச் சகிக்க முடியாமல் அவர் விவாகரத்து கோரியுள்ளார்.
16 ஆண்டுகால திருமண வாழ்வு முறிந்ததை எண்ணி லீ வருந்தினாலும், விவாகரத்தை ஏற்றுக்கொண்டார். இனி தனது கடந்த காலக் கசப்பான நினைவுகளைத் தவிர்த்துவிட்டு, முறையான மருத்துவச் சிகிச்சையில் கவனம் செலுத்தித் தனது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பப் போவதாக அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
இணையத்தில் வைரலாகி வரும் லீயின் இந்தக் கதைக்கு உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவாகவும், அவரது கணவரின் செயலைக் கண்டித்தும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.