ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் ரஷ்ய ட்ரோன்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யாவின் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்காகத் தங்கள் இராணுவ பலத்தைப் பெருக்க ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஜேர்மன் (ஜெர்மனி) அரசாங்கம் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் அமுல்படுத்தும் சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களை இராணுவச் சேவையில் இணைக்க ஜேர்மன் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்தச் சேவை ஆண்களுக்குக் கட்டாயமாகவும், பெண்களுக்குத் தன்னார்வ அடிப்படையிலும் இருக்கும்.
போர் ஏற்படும் காலங்களில் இவர்கள் இராணுவச் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் மூலம் அடுத்த ஆண்டில் மேலும் 20 ஆயிரம் பேரை இராணுவத்தில் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் ஏற்கனவே இருந்த கட்டாய இராணுவ சேவை, முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஆட்சியில் 2011ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கட்டாய இராணுவ சேவைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த எதிர்ப்புக்கு மத்தியில் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.