ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த ஒரு ஆண் தாதி (Male Nurse) தன்னுடைய பணி காலத்தில், 10 நோயாளிகளை ஊசி போட்டுக் கொலை செய்ததாகவும், 27 பேரைக் கொல்ல முயற்சி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்த அதிர்ச்சிச் சம்பவங்கள் 2023ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2024ஆம் ஆண்டு மே வரையில் நடந்துள்ளது.
இரவு நேரப் பணியின்போது, பணிச் சுமை கூடுதலாக இருக்கிறது என உணர்ந்த அவர், இந்த கொடூர முடிவை எடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை ஆச்சன் நீதிமன்றத்தில் வந்தபோது, குற்றவாளிக்கு 15 ஆண்டுகளுக்குக் குறையாமல் வெளியே வர முடியாதபடிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மேன்முறையீடு: எனினும், அவர் மேன்முறையீடு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, உயிரிழந்தவர்களின் உடல்களை வெளியே எடுக்கும் பணிகள் நடந்து வருவதால், மீண்டும் அவருக்கு எதிராக விசாரணை நடக்கும் எனத் தெரிகிறது.
ஜெர்மனியின் நவீன வரலாற்றில் கொடூரக் கொலைகாரராக நம்பப்படும் நீல்ஸ் ஹோஜெல் என்ற முன்னாள் ஆண் தாதி, 2019ஆம் ஆண்டில், வடக்கு ஜெர்மனியில் இரண்டு மருத்துவமனைகளில் வேலை செய்தபோது, 85 நோயாளிகளைக் கொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானார். 1999ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரையில் நோயாளிகளுக்கு அதிக டோஸ் மருந்துகளைக் கொடுத்ததில் பலர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் நடந்து சுமார் 20 ஆண்டுகள் கழித்து, தற்போது இதேபோன்ற மற்றொரு கொடூர வழக்கு தெரிய வந்துள்ளது.

