கனேடியர்களுக்கு கரி ஆனந்தசங்கரி விடுத்துள்ள அழைப்பு

25 6

கனடாவின் புதிய அமைச்சரவையின் பொதுபாதுகாப்பு அமைச்சராக கரி ஆனந்தசங்கரி(Gary Anandasangaree) பதவியேற்றுள்ள நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதை நான் பெருமையுடனும் பணிவுடனும் ஏற்றுக் கொள்கிறேன்.

டேவிட் மக்கின்டியின் சிறந்த பணியை அடித்தளமாகக் கொண்டு மேலும் கட்டியெழுப்ப ஆர்வமாகவுள்ள அதேவேளை, எமது சமூகங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், வெறுப்புணர்வுக் குற்றங்களுக்கு எதிராகப் போராடுவதற்கும், கனேடியர்களை நாளாந்தம் பாதுகாக்கும் முகாமை அமைப்புகளைப் பலப்படுத்தவும் நான் உறுதி பூண்டுள்ளேன்.

முடியரசு – பழங்குடிகள் உறவு மற்றும் நீதி அமைச்சுகளில் ஏற்பட்ட அர்த்தமுள்ள முன்னேற்றம் குறித்து நான் உண்மையான பெருமிதம் கொண்டுள்ளேன்.

பழங்குடிப் பங்காளிகளுடன் இணைந்து செயற்பட்டு, பலமானதும், மதிக்கப்படுவதுமான உறவுகளைக் கட்டியெழுப்பி, மீளிணக்கத்தை முன்னகர்த்தி, மேம்பட்ட எதிர்காலத்திற்கான அடித்தளத்தை நாம் கட்டியெழுப்பியுள்ளோம்.

இந்தப் புதிய பணியை நான் பொறுப்பேற்கும் இந்தவேளையில், பிரதம மந்திரி மார்க் கார்ணி என்னில் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நான் நன்றியுடையவனாக இருக்கிறேன்.

கனடாவை ஒன்றுபடுத்துவதற்கும், பாதுகாப்பைக் உறுதிப்படுத்துவதற்கும், கட்டியெழுப்பவும் எனது அமைச்சரவைச் சகாக்களுடனும், நாடாளுமன்றக் குழுவினருடனும், பங்காளி அமைப்புகளுடனும், அனைத்து மட்ட அரசுகளுடனும் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version