பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானின் ஆளும் தலிபான் படையினருக்கும் இடையில் எல்லையில் மீண்டும் மோதல்கள் வெடித்துள்ளன. கத்தார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்தில் இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு இரண்டு மாதங்கள் கூட முடியாத நிலையில் இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இம்மோதல்களின் விளைவாக நான்கு உடல்கள் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாகக் காந்தஹார் நகரத்தைச் சேர்ந்த மருத்துவ ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் தரப்பில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும், இதேவேளை பாகிஸ்தான் தரப்பில் மூன்று பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
காந்தஹாரின் தகவல் துறைத் தலைவர் அலி முகமது ஹக்மல் கூறுகையில், பாகிஸ்தான் படைகள் இலகுரக மற்றும் கனரக பீரங்கிகளால் தாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இம்மோதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் ஸ்பின் போல்டாக் (Spin Boldak) நகரில் இருந்து மக்கள் இரவோடு இரவாக வெளியேறியுள்ளனர். குறிப்பாக, பெரும்பாலானவர்கள் கால் நடையாகவும் வாகனங்களிலும் தப்பிச் சென்றுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் தாக்குதல்களை நடத்தும் ஆயுதக் குழுக்களுக்கு ஆப்கானிஸ்தானின் ஆளும் தலிபான்கள் அடைக்கலம் கொடுப்பதாக இஸ்லாமாபாத் குற்றம் சாட்டி வருகிறது.
இந்தக் குற்றச்சாட்டுகளை ஆப்கானிஸ்தான் தலிபான்கள் மறுத்துள்ளனர்.ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் 2600 கிலோ மீட்டர்கள் நீளமான எல்லையைக் கொண்டுள்ளன.