ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி (Drone) தாக்குதலில், பிரான்ஸ் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தத் தாக்குதலில் மேலும் பல பிரான்ஸ் இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர் என்பதை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்த அதிகாரி ‘7-வது ஆல்ப்பைன் சேசர்ஸ்’ பட்டாலியனைச் சேர்ந்த சீஃப் வாரண்ட் அதிகாரி அர்னால்ட் பிரியன் (Arnaud Frion) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது. எர்பில் பிராந்தியத்தில் உள்ள மக்மூர் (Makhmour) பகுதியில், பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் இராணுவத்தினர் மற்றும் குர்திஷ் பெஷ்மெர்கா படைகள் தங்கியிருந்த கூட்டுத் தளத்தையே இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலின் போது இரண்டு ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த வீரர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதலைத் தொடர்ந்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமது படைகள் மீதான இந்தத் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது” எனத் தெரிவித்த அவர், உயிரிழந்த அதிகாரியின் குடும்பத்தினருக்கும், சக வீரர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஒற்றுமையையும் தெரிவிப்பதாக எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். ஈராக்கில் பிரான்ஸ் படைகள் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கில் மட்டுமே நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இச்சம்பவம், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளமை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தத் தாக்குதலுக்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாக, அதே பகுதியில் உள்ள இத்தாலிய இராணுவத் தளத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்கள் காரணமாக, அங்குள்ள சர்வதேசக் கூட்டணிப் படைகளுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.