பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு வெடித்த வன்முறையில் இதுவரை 150 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர் பகுதியான நாண்டெர்ரே-வில் போக்குவரத்து நிறுத்தத்தில் 17 வயதுடைய நெயில் எம்(Nael m) என்ற கார் சாரதி பொலிஸாரால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் குதித்தனர், இந்த போராட்டம் வன்முறையாக வெடித்ததை தொடர்ந்து அப்பகுதியில் இரவோடு இரவாக 1200 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
முதல் நாள் இரவு நடந்த வன்முறையில் 31 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர், அத்துடன் இதில் 25 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததுடன் 40 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் 17 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு வெடித்த வன்முறை இரண்டாவது நாள் இரவும் தொடரும் நிலையில் 150 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின்(Gerald Darmanin) வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வன்முறையில் டஜன் கணக்கான பொலிஸார் காயமடைந்து இருப்பதாகவும், குடியரசின் சின்னங்களான பள்ளிகள், காவல் நிலையங்கள் போன்றவை தீ வைத்து எரிக்கப்பட்டன என்றும் அமைச்சர் டார்மானின் தனது ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் 2000 பொலிஸார் பாதுகாப்பு பணிகளுக்காக பாரிஸ் நகரில் குவிக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அமைச்சர்களுடனான அவசர கூட்டத்தை வியாழக்கிழமை கூட்டி இருப்பதாக அவரது அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
Leave a comment