பிரான்ஸில் புதிய கலவர அலை உருவாகலாம்! 2400 பேரை அதிரடியாக கைது
பிரான்ஸில் வெடித்து வரும் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 2,400 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர் பகுதியான நாண்டெர்ரே-வில் நெயில் எம்(Nael m) என்ற 17 வயது சிறுவனை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை தொடர்ந்து பிரான்ஸில் மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய இந்த கலவரம் 5வது நாள் இரவாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது, கலவரத்தை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் சிறப்புப் படை காவலர்கள் என 45,000க்கும் மேற்பட்டோர் நாடு முழுவதும் தடுப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
கலவரம் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தன்னுடைய ஜேர்மன் பயணத்தை ரத்து செய்துள்ளார்.
இந்நிலையில் கலவரத்தில் ஈடுபட்ட 2400க்கும் மேற்பட்டோர் நாடு முழுவதும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
200க்கும் மேற்பட்ட சூப்பர் மார்க்கெட்டுகள் சேதப்படுத்தப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் 12 வணிக வளாகங்கள், 250 புகையிலை கடைகள் மற்றும் 250 வங்கி கிளைகளும் சேதப்படுத்தப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இன்று மாலை முதல் புதிய கலவர அலைகள் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.