சீனாவில், சுமார் 1,400 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அரசு நிதி நிறுவனத்தின் முன்னாள் பொது முகாமையாளர் ஒருவருக்கு மரண தண்டனை நேற்று (டிசம்பர் 9) நிறைவேற்றப்பட்டுள்ளது.
‘ஹுவராங் இன்டர்நஷனல் ஹோல்டிங்ஸ்’ (Huarong International Holdings) என்ற அரசு நிதி நிறுவனத்தில் பொது முகாமையாளராகப் பணியாற்றியவர் பய் தியன்ஹுய் (Bai Tianhui).
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் உத்தரவின் பேரில் அரசு நிறுவனங்களில் லஞ்சப் புகார்கள் விசாரிக்கப்பட்டபோது, பய் தியன்ஹுய் 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில், பல திட்டங்களின் கொள்முதல் மற்றும் நிதியுதவி செயல்பாடுகளில் சலுகை வழங்க ரூ. 1,400 கோடி வரை லஞ்சம் பெற்றது தெரிய வந்தது.
இந்த வழக்கில், சீனாவின் தியான்ஜின் நகர நீதிமன்றம், 2024 மே மாதம் பய் தியன்ஹுய்க்கு மரண தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீட்டை விசாரித்த சீன உச்ச நீதிமன்றம், “பய் தியன்ஹுய் மிக அதிகளவில் லஞ்சம் பெற்றுள்ளார். அவரது செயல்பாடு அரசு மற்றும் மக்களின் நலன்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது” என்று கூறி, கடந்த பிப்ரவரி மாதம் மரண தண்டையை உறுதி செய்தது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அவரது மரண தண்டனை நேற்று (09) காலை தியான்ஜின் சிறையில் நிறைவேற்றப்பட்டது. தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், கடைசி ஆசையாக அவர் தன் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினார்.
சீனாவில் பொதுவாக விஷ ஊசி அல்லது துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும். பய் தியன்ஹுய்க்கு எந்த முறையில் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இதே ‘ஹுவராங்’ அரசு நிதி நிறுவனத்தின் முன்னாள் தலைவரான லை ஷாவ்மின் (Lai Xiaomin) என்பவருக்கும், 2,200 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், 2021 ஜனவரியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.