16,500 பேர்களுக்கு கட்டாய கருத்தடை: ஆசிய நாடொன்றின் நீதிமன்றம் தீர்ப்பு
ஜப்பானில் 1950 மற்றும் 1990 காலகட்டத்தில் 16,500 மாற்றுத்திறனாளிகளுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்ட விடயம் அரசியலமைப்பிற்கு எதிரானது என தீர்ப்பாகியுள்ளது.
அத்துடன், ஜப்பான் அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களில் மேல்முறையீடு செய்த 11 பேர்களுக்கு கூடுதல் இழப்பீட்டு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் இழப்பீடு மற்றும் மன்னிப்புக் கோரி பல தசாப்தங்களாக நீதிக்காக போராடிய பாதிக்கப்பட்டவர்களின் போராட்டம் புதன்கிழமையின் முக்கிய தீர்ப்பால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த 2019ல் அரசாங்கம் இழப்பீடு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தும், இழப்பீடு தொகையை அதிகரிக்கக் கோரி 11 பேர்கள் மேல்முறையீடு செய்தனர்.
1948ல் இயற்றப்பட்ட இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய சட்டத்தின்படி 25,000 பெண்கள், அவர்களில் பெரும்பாலானோருக்கு பரம்பரை குறைபாடுகள் இருந்தன, கட்டாய கருத்தடைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், அதில் 16,500 கருத்தடை அறுவை சிகிச்சைகள் ஒப்புதல் இல்லாமல் செய்யப்பட்டதாக ஜப்பான் அரசாங்கமே ஒப்புக்கொண்டது. 8,500 பேர்கள் இந்த நடைமுறைகளுக்கு சம்மதித்ததாக அதிகாரிகள் கூறினாலும், அப்போதிருந்த சூழ்நிலையின் கட்டாயம் அவர்களை ஒப்புக்கொள்ள வைத்ததாக சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.
கொடூரத்தின் உச்சமாக 9 வயது சிறார்களுக்கும் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக 2023 ஜூன் மாதம் வெளியான நாடாளுமன்ற அறிக்கையில் அம்பலமானது. ஆனால் அந்த கொடூர சட்டமானது 1996ல் ரத்து செய்யப்பட்டது.
2019ல் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் சிக்கி, தற்போது உயிருடன் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தலா 3.2 மில்லியன் யென் (15,600 பவுண்டுகள்) இழப்பீடு வழங்க உத்தரவானது.
இதனையடுத்து சுமார் 1,300 பேர்கள் இழப்பீடு கோரி விண்ணப்பித்தனர். இதுவரை 1,100 பேர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.