ரஷ்யாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் தீ விபத்து..5 பேர் பலியான சோகம்
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர்.
மாஸ்கோவின் பலக்ஷிகா (Balashikha) புறநகர் பகுதியில் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இங்கு வெளிநாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட பல பணியாளர்கள் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இரண்டாவது மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மள மளவென தீ பரவியதைத் தொடர்ந்து பலர் உயிர் பயத்தில் சன்னல் வழியாக வெளியே குதித்து தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, பலரை அங்கிருந்து பத்திரமாக மீட்டனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக 5 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் சிலர் காயமடைந்தனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.