இரட்டை கார் குண்டு வெடிப்பு! – 100 க்கும் மேற்பட்டோர் பலி

1667178267 Somaliya 2

சோமாலியா தலைநகர் மொகாடிஸ்ஹூவில் நிகழ்ந்த இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஹஸ்ஸன் ஷேக் மொகம்மது தெரிவித்துள்ளார்.

சோமாலிய தலைநகர் மொகாடிஸ்ஹூவில் உள்ள அந்நாட்டின் கல்வி அமைச்சகத்தின் முன்பாக நேற்றிரவு இந்த கார் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

முதலில், ஒரு கார் வெடித்து சிதறி உள்ளது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் அருகில் இருந்தவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மற்றொரு கார் வெடிகுண்டு வெடித்துள்ளது.

வெடி விபத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்த சோமாலியா ஜனாதிபதி ஹஸ்ஸன் ஷேக் மொகம்மது, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, குழந்தைகள், பெண்கள், மாணவர்கள், தொழில்புரிபவர்கள் என பலரும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக வேதனை தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்ற போதிலும், அல் ஷபாப் என்ற இஸ்லாமிய அமைப்பு இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கக்கூடும் என ஜனாதிபதி ஹஸ்ஸன் ஷேக் மொகம்மது குற்றம் சாட்டியுள்ளார். மிகப் பெரிய உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தக் கூடிய தாக்குதல்களை நிகழ்த்தும் இந்த அமைப்பு, பொதுவாக அவற்றுக்கு பொறுப்பேற்பதில்லை என கூறப்படுகிறது.

கடந்த 2017 இல் குண்டுவெடிப்பு நிகழ்ந்த அதே இடத்தில் தற்போது மீண்டும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. கடந்தமுறை நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அப்போது டிரக் வாகனத்தின் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. தற்போது 2 கார்களைக் கொண்டு குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

#world

Exit mobile version