அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பெண்களின் தோற்றம் குறித்துத் தான் வெளியிடும் கருத்துக்களால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இத்தாலிப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியிடம் அவர் பேசியதையடுத்து, தற்போது தனது வெள்ளை மாளிகை பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் (Karoline Leavitt) குறித்துப் பேசிய கருத்துக்கள் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளன.
அண்மையில் இத்தாலிப் பிரதமர் மெலோனியிடம், “நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே? உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண்” என்று டிரம்ப் கூறியது உலகளவில் பேசு பொருளானது. “இதை நான் அமெரிக்காவில் பேசியிருந்தால், என்னுடைய அரசியல் வாழ்க்கையே முடிந்திருக்கும்” எனவும் ட்ரம்ப் கிண்டலாகத் தெரிவித்தார்.
பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் ட்ரம்ப், தமது நிர்வாகத்தின் பொருளாதார வெற்றிகள் குறித்துப் பேசியபோது, “இன்னைக்கு நம்ம சூப்பர் ஸ்டார் கரோலினைக் கூட கூட்டிட்டு வந்தோம். அவள் அந்த அழகான முகத்துடனும், ஒரு சிறிய இயந்திர துப்பாக்கியைப் போல நிற்காத உதடுகளுடனும் (non-stop mouth like a little machine gun) உள்ளார்” என்று பேசியுள்ளார்.
ட்ரம்பின் இந்த இரு பேச்சுகளும் தற்போது சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.