அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகலாம் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் இன்றும் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன. மத்திய கிழக்கின் பதற்றமான சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணைப்பு மூடப்பட்டமையால் தடைப்பட்டிருந்த எண்ணெய் விநியோகம், இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் மீண்டும் சீராகலாம் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.
இதன்படி, சர்வதேச சந்தையில் பிரெண்ட் (Brent) மசகு எண்ணெய் விலை 0.55% குறைந்து ஒரு பீப்பாய் 94.27 டொலராகப் பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ (WTI) மசகு எண்ணெய் விலை 1.04 டொலர்கள் (1.1%) குறைந்து ஒரு பீப்பாய் 90.24 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் அடுத்த இரண்டு நாட்களில் பாகிஸ்தானில் மீண்டும் ஆரம்பமாக வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
கடந்த வார இறுதியில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா தடை விதித்திருந்தது. இதனால் உலக நாடுகளுக்கான முக்கிய கடல் வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணைப்பு ஊடான போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தற்போது இரண்டு வார போர் நிறுத்தம் அமலில் இருந்தபோதிலும், வழமையான கப்பல் போக்குவரத்தில் ஒரு சிறு பகுதி மாத்திரமே நடைபெற்று வருவதால் எண்ணெய் விநியோகத்தில் தொடர்ந்தும் மந்தநிலை நிலவி வருகிறது.
இருப்பினும், கடல் மார்க்கமாகக் கொண்டு செல்லப்படும் ஈரானிய மற்றும் ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளில் வழங்கப்பட்டிருந்த சலுகைகளை இனி நீடிக்கப் போவதில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தகைய கடுமையான புவிசார் அரசியல் நகர்வுகளுக்கு மத்தியிலும், பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றால் மட்டுமே மசகு எண்ணெய் விநியோகம் சீரடைந்து விலை மேலும் நிலையான நிலையை எட்டும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.