மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அதிரடி மாற்றம்!

world 87

பாப் இசையின் மன்னர் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘மைக்கேல்’ (Michael) திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியாகவுள்ளது. அன்டோயின் ஃபூக்வா இயக்கியுள்ள இத்திரைப்படம், ஜாக்சனின் வாழ்க்கையை எவ்வித பாரபட்சமுமின்றி நேர்மையாகச் சித்தரிக்கும் என முதலில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஜாக்சன் மீதான குழந்தை துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் தொடர்பான காட்சிகள் படத்திலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன.

திரைப்படத்தின் ஆரம்பக்கால பதிப்பில், 1993-ஆம் ஆண்டு ஜாக்சன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் நெவர்லேண்ட் பண்ணையில் நடந்த போலீஸ் சோதனை போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இருப்பினும், ஜாக்சன் குடும்பத்தினரின் தலையீடு மற்றும் சட்ட ரீதியான சிக்கல்கள் காரணமாக இந்தக் காட்சிகள் நீக்கப்பட்டு, கடந்த கோடையில் சுமார் 22 நாட்கள் மேலதிக படப்பிடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இதற்காக 10 முதல் 15 மில்லியன் டாலர்கள் வரை கூடுதலாகச் செலவிடப்பட்டுள்ளதாக ‘வெரைட்டி’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, 1993-ல் ஜாக்சனுடன் சமரச ஒப்பந்தம் செய்துகொண்ட ஜோர்டான் சாண்ட்லர் என்பவரை எந்தவொரு திரைப்படத்திலும் சித்தரிக்கக் கூடாது என்ற சட்ட நிபந்தனையை ஜாக்சன் குடும்ப வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்தே இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால், சர்ச்சைக்குரிய இறுதிப் பகுதிகளுக்குப் பதிலாக, ஜாக்சன் தனது ‘பேட்’ (Bad) உலகளாவிய இசைப்பயணத்தின் மூலம் புகழின் உச்சத்தில் இருக்கும் காட்சியுடன் படம் நிறைவடையும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஜாக்சனின் மருமகன் ஜாஃபர் ஜாக்சன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தின் தயாரிப்பில், ஜாக்சனின் மகன் பிரின்ஸ் மற்றும் குடும்ப வழக்கறிஞர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். கோல்மன் டொமிங்கோ, நியா லாங் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இத்திரைப்படம், ஜாக்சனின் கலைப் பயணத்தையும் அவரது தனிப்பட்ட போராட்டங்களையும் மட்டுமே முன்னிலைப்படுத்தும் ஒரு படைப்பாக அமையவுள்ளது. பாப் உலகின் ஜாம்பவானின் சாதனைகளைத் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தாலும், சர்ச்சைகளைத் தவிர்த்துள்ள இந்த முடிவு விமர்சகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version