அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கடும்போக்கு கொள்கைகள் மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் காரணமாக, கனேடிய மக்கள் அமெரிக்காவிற்குச் சுற்றுலா செல்வதைப் புறக்கணித்து வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கனடாவை அமெரிக்காவின் ’51ஆவது மாகாணமாக’ இணைப்பதாக ட்ரம்ப் தெரிவித்த கருத்து கனேடியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கனடா மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரிகள் மற்றும் வர்த்தகக் கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் அமெரிக்கா மீதான அதிருப்தியில் உள்ளனர்.
அமெரிக்காவிற்குச் செல்வதைத் தவிர்த்து வரும் கனேடிய சுற்றுலாப் பயணிகள், தற்போது தங்களது விருப்பமான சுற்றுலாத் தலமாக மெக்சிகோவைத் (Mexico) தெரிவு செய்துள்ளனர். அமெரிக்காவிற்குப் பதிலாக மெக்சிகோவின் கடற்கரைகள் மற்றும் கலாசார இடங்களுக்குச் செல்வதில் கனேடியர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இருப்பினும், கனேடியர்கள் அமெரிக்காவை முழுமையாகக் கைவிடவில்லை. ட்ரம்ப்பின் பதவிக்காலம் முடிந்த பிறகு, நிலைமைகள் சீரானதும் மீண்டும் அமெரிக்காவைத் தமது சுற்றுலாத் தளமாகத் தேர்ந்தெடுக்கவுள்ளதாகப் பல சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.