கனடா பிரதமருக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்த அமெரிக்கா
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், அமெரிக்க வெளியுறவுச் செயலரும் நேற்று சந்தித்து பல முக்கிய விடயங்கள் குறித்து விவாதித்தார்கள்.
முன்னதாக இந்த சந்திப்பு குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசும்போது, அமெரிக்க வெளியுறவுச் செயலரான Antony Blinken, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்கும்போது, கனடாவில் கொல்லப்பட்ட கனேடியர் தொடர்பில் நிச்சயம் பிரச்சினையை எழுப்புவார் என்று கூறியிருந்தார்.
ஆனால், கனடா பிரதமருக்கு ஏமாற்றம்தான் பதிலாக கிடைத்துள்ளது. அமெரிக்க வெளியுறவுச் செயலரான Antony Blinkenம், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான S. ஜெய்ஷங்கரும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
ஆனால், இரு நாட்டு வெளியுறவு விவகாரங்கள் அமைச்சர்களும் சந்தித்தபின் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், கனடா இந்திய பிரச்சினை குறித்து எதுவுமே குறிப்பிடப்படவில்லை.
கனேடிய குடிமகன் ஒருவர், கனடா மண்ணில் வைத்தே கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவரே கொல்லப்பட்டவர் ஆவார்.
ஆக, கனடா இந்திய மோதல் குறித்து பேசுவதில், அமெரிக்கா மட்டுமல்ல, கனடாவின் மற்ற நட்பு நாடுகளும் கவனமாகவே இருக்கின்றன.
சீனாவிடமிருந்து மேற்கத்திய நாடுகளை பாதுகாக்கும் ஒரு தடுப்புச்சுவராக இந்தியா மேற்கத்திய நாடுகளால் பார்க்கப்படுகிறது என்பது பலரும் அறிந்த விடயம். ஆக, இந்தியாவை பகைத்துக்கொள்ளக்கூடாது என்பதில் மேற்கத்திய நாடுகள் பல கவனமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.