மகளுக்கு கிடைக்க இருந்த நல்ல வாய்ப்பைக் கெடுத்த பிரித்தானிய இளவரசர்
பிரித்தானிய மன்னரான சார்லசும், வருங்கால ராணியான இளவரசி கேட்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருக்கும் நிலையில், இளைய தலைமுறையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு முக்கிய பொறுப்புக்களை கொடுக்க திட்டமிட்டிருந்தார் மன்னர் சார்லஸ்.
ஆனால், அந்தப் பெண்ணுக்கு கிடைக்க இருந்த அந்த நல்ல வாய்ப்புக்கு, அந்தப் பெண்ணின் தந்தையே தடையாகிவிட்டார்!
சில திரைப்படங்களில் காட்டப்படுவதுபோலவே, இளவரசர்கள் என்றாலே ஆசைப்பட்டதை எல்லாம் செய்யலாம், எத்தனை பெண்களுடனும் ஜாலியாக சுற்றலாம், யாரும் கேட்கமாட்டார்கள் என்னும் ரீதியில் பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ செய்த விடயங்கள், இன்று அவரது பிள்ளைகளுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளன.
பிரித்தானிய தொலைக்காட்சிகள் எந்த அளவுக்கு பிரபல ராஜ குடும்ப உறுப்பினர்களின் புகழ் பாடுகின்றனவோ, அதே அளவுக்கு, மோசமான ராஜ குடும்ப உறுப்பினர்களின் மானத்தையும் வாங்காமல் விடுவதில்லை எனலாம்.
அவ்வகையில், சிறுமிகளையும், இளம்பெண்களையும் சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவருடன் இளவரசர் வைத்திருந்த நட்பால் ஏற்பட்ட பிரச்சினைகள், தொடர்ந்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவருகின்றன.
இளவரசர் ஆண்ட்ரூ பருவம் எய்தாத பெண்களுடன் உறவு வைத்திருந்தது தொடர்பான விடயங்கள், நெட்ஃப்ளிக்ஸில் இம்மாதம், அதாவது, ஏப்ரல் 5ஆம் திகதி, Scoop என்னும் தொடராக வெளியானது. அதைத் தொடர்ந்து, அமேசான் பிரைமில், A Very Royal Scandal என்னும் மற்றொரு நிகழ்ச்சியும் வெளியாக உள்ளது.
பிரித்தானியாவைப் பொருத்தவரை தொலைக்காட்சித் தொடர்கள் எந்த அளவுக்கு மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, தபால் நிலைய ஊழியர்கள் தவறாக குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட, Mr Bates vs The Post Office என்னும் தொலைக்காட்சித் தொடர் ஜனவரி 1ஆம் திகதி வெளியாகி, நாடு முழுவதும் இன்னமும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருவதிலிருந்து நன்கு அறிந்துகொள்ள முடியும்.
இந்நிலையில், மன்னர் சார்லசும், இளவரசி கேட்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருக்கும் நிலையில், இளவரசர் ஆண்ட்ரூவின் மகளான பீட்ரைசுக்கு முக்கிய பொறுப்புக்களை கொடுக்க திட்டமிட்டிருந்தார் மன்னர் சார்லஸ்.
ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் மற்றும் வெளியாக இருக்கும் இளவரசர் ஆண்ட்ரூவைக் குறித்த தொலைக்காட்சித் தொடர்கள் மன்னருடைய திட்டத்துக்கு தடையாக அமையக்கூடும் என கருதப்படுகிறது.
ஆக, இளவரசி பீட்ரைசுக்கு நல்ல வாய்ப்பொன்று வந்த நிலையில், அவரது தந்தையான இளவரசர் ஆண்ட்ரூவின் மோசமான நடத்தையால் மகளுடைய எதிர்காலம் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
உண்மையில், தொலைக்காட்சித் தொடர்கள் ராஜ குடும்ப உறுப்பினர்களின் தவறுகளை, அது, இளவரசி டயானாவின் துரோகமானாலும் சரி, இளவரசர் ஆண்ட்ரூவின் மோசமான நடத்தையானாலும் சரி, நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும் நிலையில், சம்பந்தப்பட்டவர்களின் பிள்ளைகள் காலாகாலத்துக்கும் அதனால் ஏற்படும் அவமானத்தை சுமந்துகொண்டுதான் இருக்கவேண்டும் என்பது விதிபோலும்!