அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டாய் (Bondi) கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, உயிர் தப்பிய சந்தேக நபரான நவீட் அக்ரம் மீது 59 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஹனுக்கா பண்டிகையின் முதல் இரவைக் கொண்டாடிக்கொண்டிருந்த யூத சமூகத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயமடைந்தனர். இது 1996 ஆம் ஆண்டிற்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற மிக மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமாகப் பதிவாகியுள்ளது.
தாக்குதலை நடத்தியவர்களில் ஒருவரான 50 வயதுடைய சாஜித் அக்ரம், காவல்துறையினருடனான துப்பாக்கிச் சமரின் போது சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். அவரது மகனான நவீட் அக்ரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
நியூ சவுத் வேல்ஸ் (NSW) காவல்துறையினர் நவீட் அக்ரம் மீது பின்வரும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர். 15 கொலைக் குற்றச்சாட்டுகள் ஒரு பயங்கரவாதச் செயல் புரிந்தமைக்கான குற்றச்சாட்டு ஏனைய வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்ட மொத்தம் 59 குற்றச்சாட்டுகள்.
இந்தச் சம்பவம் சர்வதேச ரீதியாகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

