இலங்கைக்கு வந்த கப்பலால் நேர்ந்த அனர்த்தம்! மீட்புப்பணிகள் ஆரம்பம்
அமெரிக்காவின் மெரிலேண்ட் மாநிலத்தின் போல்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்கொட் கீ என்ற பாலத்தில் மோதிய கப்பலை அகற்றும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.
படாஸ்கோ ஆற்றின் குறுக்காக நிர்மாணிக்கப்பட்டு வந்த சுமார் 3 கிலோமீற்றர் நீளமான பாலமொன்றே இதன்போது உடைந்து வீழ்ந்துள்ளது.
சிங்கப்பூர் கொடியுடன் 27 நாட்கள் கடல் பயணமாக இலங்கையின் கொழும்பு நோக்கி புறப்பட்ட கப்பல், துறைமுகத்தை விட்டு கிளம்பிய 20 முதல் 30 நொடிகளிலேயே மின்சக்தி இல்லாத காரணத்தினால் கப்பலில் உள்ள விளக்குகள் அணைந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.
இந்த விபத்தில் பாலத்தில் பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கப்பல் விபத்துக்குள்ளாகுவதற்கு முன்னர் அதன் கட்டுப்பாட்டை இழந்து திசை மாற்று கருவி இயங்கவில்லை எனவும், 5 சந்தர்ப்பங்களில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் குறித்த கப்பலில் உள்ள சில கொள்கலன்கள் அகற்றப்பட்டுள்ளதுடன், கப்பலை அகற்றுவதற்காக இரண்டு இயந்திரங்களின் உதவி அவசியமாக உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, பாலத்தை மீட்டெடுக்க 60 மில்லியன் டொலர் மத்திய அரசின் அவசர நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பாலம் இடிந்து விழுந்ததற்கான காப்பீட்டு இழப்பீடு 3 பில்லியன் டொலரைத் தாண்டும் என்றும் வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கப்பல் மார்ஸ்க் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் உறுதி செய்துள்ளது.