இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் (Penny Wong) தனது கவலையை வெளியிட்டுள்ளார். இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டும் என்றும், தற்போது நடைமுறையிலுள்ள போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில், “அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள் உடன்பாடு இன்றி முடிவடைந்தது ஏமாற்றமளிக்கிறது. இந்த மோதலுக்கு இராஜதந்திர ரீதியில் விரைவான தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எமது விருப்பம். தற்போது நிலவும் போர் நிறுத்தத்தைத் தொடர்வதும், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளில் மீண்டும் ஈடுபடுவதுமே தற்போதைய முன்னுரிமையாக இருக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோதல் மேலும் தீவிரமடைந்தால், அது ஈடுசெய்ய முடியாத மனித உயிர் இழப்புகளை ஏற்படுத்துவதுடன், ஏற்கனவே தத்தளித்துக் கொண்டிருக்கும் உலகப் பொருளாதாரத்தை மேலும் மோசமாகப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க சர்வதேச சமூகத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம் என்பதையும் அவர் தனது அறிக்கையில் கோடிட்டுக் காட்டியுள்ளார்