உலகம்
போட்டி மிகுந்த மூன்று மாகாணங்களில் அதிரடி முன்னிலை… சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்
போட்டி மிகுந்த மூன்று மாகாணங்களில் அதிரடி முன்னிலை… சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்
வெளியான புதிய கருத்துக்கணிப்புகளில் மூன்று முக்கிய மாகாணங்களில் டொனால்ட் ட்ரம்பை விட கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில், ஜனநாயகக் கட்சி தங்கள் ஆதிக்கத்தை மீண்டெடுத்து வருவதாகவே கூறுகின்றனர்.
கமலா ஹாரிஸ் தற்போது விஸ்கான்சின், பென்சில்வேனியா மற்றும் மிச்சிகன் ஆகிய போட்டி மிகுந்த மாகாணங்களில் ட்ரம்பை விடவும் 4 சதவிகிதம் புள்ளிகள் முன்னிலையில் உள்ளார்.
மின்னசோட்டா மாகாண ஆளுநரும் முன்னாள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியருமான Tim Walz என்பவரை அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதி பொறுப்புக்கு கமலா ஹாரிஸ் தெரிவு செய்ததன் பின்னர், ஆகஸ்டு 5 முதல் 9 வரை கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜோ பைடன் தேர்தல் களத்தில் இருந்து வெளியேறியதன் பின்னர் மிக முக்கியமான, போட்டி மிகுந்த மாகாணங்களில் ஜனநாயகக் கட்சியின் ஆதரவு அதிகரித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பை விடவும் புத்திசாலி, மிகவும் நேர்மையானவர், அத்துடன் நாட்டை நடத்துவதற்கு தேவையான மனோபலம் கமலா ஹாரிஸிடம் இருப்பதாக மக்கள் உணரத் தொடங்கியதே செல்வாக்கு அதிகரிக்க காரணம் என்றும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, சனிக்கிழமை வெளியான கருத்துக்கணிப்புகள் ஜனநாயகக் கட்சிக்கு புது நம்பிக்கையை அளித்துள்ளதாகவும் கூறுகின்றனர். கமலா ஹாரிஸ் மற்றும் Tim Walz ஆகியோர் போட்டி மிகுந்த மாகாணங்களில் தொடர்ந்து பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பென்சில்வேனியாவில் கடந்த முறை 80,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடன் டிரம்பை தோற்கடித்தார். தற்போது கமலா ஹாரிஸின் செல்வாக்கு பென்சில்வேனியாவில் அதிகரித்துள்ளதாகவே தெரிய வருகிறது.
2020ல் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ள விஸ்கான்சின், பென்சில்வேனியா மற்றும் மிச்சிகன் ஆகிய போட்டி மிகுந்த மாகாணங்களில் கமலா ஹாரிஸ் கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
ஆனால், சமீப நாட்களில் ட்ரம்பின் பரப்புரைகள் மக்களை கவரவில்லை என்ற கருத்தும் பரவலாக பேசுபொருளாக மாறியுள்ளது.