உலகம்
ஈரான் ஜனாதிபதியின் உயிரிழப்பால் மத்திய கிழக்கு நாடுகளில் பிரச்சினைகள் ஏற்படலாம்?
ஈரான் ஜனாதிபதியின் உயிரிழப்பால் மத்திய கிழக்கு நாடுகளில் பிரச்சினைகள் ஏற்படலாம்?
ஈரான் ஜனாதிபதி ஹெலிகொப்டர் விபத்தொன்றில் பலியானதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் உயிரிழந்தது உண்மையானால், அதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பாரிய பிரச்சினைகள் ஏற்படலாம் என கருதப்படுகிறது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரில், ஈரான் ஆதரவு போராளிக்குழுக்களான, லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹவுதிக்கள் முதலான குழுக்களும் தலையிட்டு வருவது அனைவரும் அறிந்ததே.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஈரான் ஜனாதிபதி ஹெலிகொப்டர் விபத்தொன்றில் பலியானதாக வெளியாகியுள்ள தகவல், மத்திய கிழக்கு நாடுகளில் பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என கருதப்படுகிறது.
ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் காரணமாக, இஸ்ரேல் ஈரானை தனக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாகவே பார்த்துவருகிறது. ஈரானோ, தன்னை பாலஸ்தீனத்தின் புரவலனாக, ஆபத்பாந்தவனாக கருதிக்கொண்டுள்ளது. ஈரான் தலைவர்கள் பலர் பல ஆண்டுகளாக இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்தே காணாமல்போகச் செய்யவேண்டுமென சூழுரைத்துவருகிறார்கள்.
ஈரான் ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசியோ, கடந்த மாதம்கூட, இஸ்ரேல் கடந்த 75 ஆண்டுகளாக பாலஸ்தீன மக்களுக்கெதிராக கொடுமையான அநியாய செயல்களில் ஈடுபட்டுவருகிறது என்றும், ஆகவே முதலாவது அவர்களை அகற்றவேண்டும் என்றும், இரண்டாவது, அவர்களால் ஏற்பட்ட இழப்புகளுக்கு அவர்களை பொறுப்பேற்கச் செய்யவேண்டும் என்றும் மூன்றாவதாக, அவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதற்கிடையில், ஏற்கனவே இஸ்ரேல் மூத்த ஈரானிய ராணுவ அதிகாரிகளையும், அணு விஞ்ஞானிகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்திவருவதாக நம்பப்படுகிறது.
ஈரான் ஜனாதிபதியின் ஹெலிகொப்டர் விபத்துக்கும் இஸ்ரேலுக்கும் தொடர்பு இருப்பதாக ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை. அத்துடன், இஸ்ரேல் தரப்பு இதுவரை ஹெலிகொப்டர் விபத்து குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவும் இல்லை.
என்றாலும், ஈரான் ஜனாதிபதி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விடயம், ஏதேனும் ஒரு தரப்பிலிருந்து விரும்பத்தகாத மோதல்களை உருவாக்கி போரை பெரிதாக்கிவிடக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளதை மறுப்பதற்கில்லை.