உலகம்
இளவரசர் ஹரியின் தொலைக்காட்சி பேட்டி: அமெரிக்கக் குடிமகனாகும் எண்ணம் குறித்து தெரிவித்துள்ள கருத்து…
இளவரசர் ஹரியின் தொலைக்காட்சி பேட்டி: அமெரிக்கக் குடிமகனாகும் எண்ணம் குறித்து தெரிவித்துள்ள கருத்து…
பிரித்தானிய இளவரசரான ஹரி அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்று நேற்று ஒளிபரப்பான நிலையில், அந்தப் பேட்டியின்போது, அமெரிக்கக் குடிமகனாகும் எண்ணம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இளவரசர் ஹரி தொலைக்காட்சி பேட்டி
பிரித்தானிய இளவரசர் ஹரி அளித்த பேட்டி ஒன்று, அமெரிக்கத் தொலைக்காட்சியான ABC தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பானது.
ஏற்கனவே ஒருமுறை அமெரிக்கத் தொலைக்காட்சிப் பிரபலமான ஓபரா வின்ஃப்ரேக்கு ஹரியும் மேகனும் அளித்த பேட்டி, ராஜ குடும்பத்தை கதிகலங்கச் செய்த நிலையில், ஹரி இம்முறை என்ன கூறுவாரோ என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்தது.
ஆனால், இம்முறை சர்ச்சைக்குரிய விதத்தில் அவர் ஒன்றும் கூறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கக் குடிமகனாகும் எண்ணம் குறித்து தெரிவித்துள்ள கருத்து
இதற்கிடையில், ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தை விட்டும், பிரித்தானியாவை விட்டும் வெளியேறி அமெரிக்காவில் குடியேறிய நிலையில், அமெரிக்கக் குடிமகனாகும் எண்ணம் உங்களுக்கு இருந்ததா என ஹரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலை ஊடகங்கள் பல விமர்சித்துள்ளன.
அமெரிக்கக் குடிமகனாகும் எண்ணம் உங்களுக்கு இருந்ததா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஹரி, அது குறித்து தான் யோசித்ததாகவும், ஆனால், இப்போதைக்கு அது தனக்கு முக்கியமான விடயம் அல்ல என்றும் பதிலளித்தார்.
அவரது பதிலை விமர்சித்துள்ள ஊடகவியலாளர்கள் சிலர், அப்படி ஹரி அமெரிக்கக் குடிமகனானால், அது பிரித்தானிய மன்னரையும் மக்களையும் அவமதிப்பதுபோல் அமைந்திருக்கும் என்றும், அப்படி அவர் அமெரிக்கக் குடிமகனாக முடிவு செய்தால், அவர் தனது பட்டத்தைத் துறக்கவேண்டியிருக்கும் என்றும், அது பிரித்தானிய ராஜ பரம்பரையில், அரியணையேறும் வரிசையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்காது என்றாலும், அது அவர் எடுக்கும் ஒரு மிகப்பெரிய முடிவாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்கள்.
பிரித்தானிய இளவரசரான ஹரியின் மனைவி மேகனும், தம்பதியரின் பிள்ளைகளும், அமெரிக்கக் குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.