உலகம்
இது ஜேர்மனி… புலம்பெயர்ந்தோரை எதிர்க்கும் நாடு அல்ல: அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்றுக்கொடுத்த மக்கள்
இது ஜேர்மனி… புலம்பெயர்ந்தோரை எதிர்க்கும் நாடு அல்ல: அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்றுக்கொடுத்த மக்கள்
ஜேர்மனி, புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் நாடு என பெயர் பெற்ற நாடு. ஐரோப்பிய ஒன்றியத்திலேயே அதிக எண்ணிக்கையிலான அகதிகளுக்கு, வாழ இடம் கொடுத்துள்ள நாடு அது. 2015ஆம் ஆண்டு, ஜேர்மன் சேன்ஸலராக இருந்த ஏஞ்சலா மெர்க்கல், அகதிகளை அவர் இருகரம் விரித்து வரவேற்றதை உலகத்தில் யாருமே மறக்கமுடியாது.
ஆனால், சமீப காலமாக ஜேர்மனியில் நிகழ்ந்த சில விடயங்கள், ஜேர்மன் மக்களின் மன நிலைமையே மாறிப்போனதோ என்ற எண்ணத்தை உருவாக்கின.
கடந்த ஆண்டின் இறுதிக்காலாண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில், பழமைவாத மற்றும் தீவிர வலதுசாரிக் கட்சிகள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. ஆளும் ஓலாஃப் கட்சியோ பின்னடைவைச் சந்தித்தது.
வலதுசாரியினர், புலம்பெயர்தலுக்கு எதிரான கருத்துக்கள் கொண்டவர்கள் ஆவர். ஆக, வலதுசாரிக் கட்சிகள் வெற்றி பெற்றதால், மக்கள் அவர்களுக்கு ஆதரவளிக்கத் துவங்கியுள்ளார்கள் என்ற ஒரு கருத்து உருவாகத் துவங்கிற்று.
ஆனால், அது முழுவதும் உண்மையில்லை என நிரூபித்துள்ளார்கள் ஜேர்மன் மக்கள். கடந்த நவம்பரில், பெர்லினுக்கு வெளியே, வலதுசாரிக் கட்சியான AfD கட்சியினர் சிலர், தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த சிலர் உட்பட, பலர் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுள்ளனர்.
அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள், ஜேர்மனியில் வாழும் புலம்பெயர்ந்தோர் முதல் ஜேர்மானியக் குடியுரிமை பெற்ற புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள் வரை, அனைவரையும் ஜேர்மனியிலிருந்து நாடுகடத்துவது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டதாக ஊடகங்கள் சமீபத்தில் வெளியிட்ட செய்தியால் நாடே பரபரப்பானது.
அந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அந்தக் கூட்டத்துக்கும், கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும், அதன் பின்னணியில் இருக்கும் வலதுசாரிக் கட்சிக்கும் எதிராக மில்லியன் கணக்கான மக்கள் சாலைகளில் இறங்கி பேரணிகள் நடத்தினார்கள்.
இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன் வரை வலதுசாரிக் கட்சியினருக்கு ஆதரவு தெரிவித்த மக்களில் ஒரு பகுதியினர், வலதுசாரிக் கட்சியான AfD கட்சிக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளார்கள்.
ஆம், Thuringia மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில், AfD கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.
அக்கட்சியின் வேட்பாளரான Uwe Thrumக்கு 47.6 சதவிகித வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட CDU கட்சி வேட்பாளரான Christian Herrgottக்கு 52.4 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன.
இரண்டு வாரங்களுக்கு முன் Uwe Thrum மக்கள் ஆதரவைப் பெற்றிருந்த நிலையில், ஜேர்மனியில் வாழும் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள் அனைவரையும் ஜேர்மனியிலிருந்து நாடுகடத்துவது தொடர்பான ஆலோசனையில் AfD கட்சியினரும் ஈடுபட்டதாக ஊடகங்கள் சமீபத்தில் வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து மக்கள் மன நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அக்கட்சிக்கும், அதன் கொள்கைகளுக்கும் ஜேர்மனியில் ஆதரவு இருக்கலாம். ஆனாலும், இது ஜேர்மனி, இது புலம்பெயர்ந்தோரை எதிர்க்கும் நாடு அல்ல என வாக்குகள் மூலம் அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்றுக்கொடுத்துள்ளார்கள் மக்கள்!