உலகம்
துஸ்பிரயோக வழக்கு… முன்னாள் ஜனாதிபதிக்கு ரூ 689 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்
துஸ்பிரயோக வழக்கு… முன்னாள் ஜனாதிபதிக்கு ரூ 689 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்
அமெரிக்க பத்திரிகையாளர் மற்றும் நூல் ஆசிரியரான பெண்மணி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்புக்கு ரூ 689 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பத்திரிகையாளரும் பல நூல்களை வெளியிட்டவருமான E. Jean Carroll என்பவருக்கே மன்ஹாட்டனில் உள்ள நீதிமன்றம் இழப்பீடு வழங்க முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்டு ட்ரம்புக்கு உத்தரவிட்டுள்ளது.
மொத்தம் 10 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு தற்போது 83.3 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மன்ஹாட்டனில் உள்ள நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வெளியிடும் முன்னர் நீதிமன்ற அவையில் இருந்து முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் புயல் வேகத்தில் வெளியேறியதாக கூறப்படுகிறது.
E. Jean Carroll என்பவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த குற்றத்திற்காக 11 மில்லியன் டொலர் தொகையும், உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதற்காகவும் பிற பாதிப்புகளுக்காகவும் 7.3 மில்லியன் டொலர் தொகையும், தண்டனைக்கு ஒப்பான செயலுக்கு இழப்பீடாக 65 மில்லியன் டொலர் தொகையும் அளிக்க ட்ரம்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ட்ரம்ப் மீதான வன்கொடுமை மற்றும் அவதூறு வழக்கில் கரோலுக்கு ஏற்கனவே 5 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கில் மொத்தமாக 88.3 மில்லியன் டொலர் கரோலுக்கு முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமது புகார் மனுவில் 10 மில்லியன் டொலர் மட்டுமே கரோல் இழப்பீடாக கோரியிருந்தார். ஆனால் தற்போது 8 மடங்கு அதிகமாக நீதிமன்றம் இழப்பீடு அறிவித்துள்ளது. இதனிடையே, தீர்ப்பு தமக்கு சாதகமாக அமையாது என்பதை உணர்ந்த ட்ரம்ப், நீதிமன்றத்தில் இருந்து தடாலடியாக வெளியேறியதாக கூறப்படுகிறது.
ட்ரம்ப் வெளியேறும் முன்னர், அவரது சட்டத்தரணிக்கும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது. வாதிடும் நேரம் முடிவுக்கு வந்ததாக நீதிபதி பலமுறை குறிப்பிட்டும் அவர் தொடர்ந்து விளக்கமளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, இன்னும் வாதிடுவதை நிறுத்தவில்லை என்றால் சிறைக்கு செல்ல நேரிடும் என நீதிபதி மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 1996ல் நியூயார்க் நகர ஸ்டோர் ஒன்றில் வைத்து ட்ரம்ப் தம்மை வன்கொடுமை செய்ததாக தற்போது 80 வயதாகும் கரோல் புகார் அளித்திருந்தார்.
ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்த டொனால்டு ட்ரம்ப், அவரை இழிவு செய்யும் வகையில் அறிக்கை வெளியிட்டார். விசாரணையின் தொடக்கத்தில் ட்ரம்ப் மீது தவறில்லை என்றே கருதப்பட்டது.
ஆனால் பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்பதுடன், அவர் மனுதாரரை கடுமையாக விமர்சித்து இழிவு செய்ததும் உறுதி செய்யப்பட்டது. மொத்தம் ரூ 689 கோடி இழப்பீடு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக கடுமையாக விமர்சனம் முன்வைத்த ட்ரம்ப்,
இது அமெரிக்கா அல்ல, அமெரிக்காவில் நீதி கிடைக்க வாய்ப்பில்லை என கொந்தளித்துள்ளார். மட்டுமின்றி, தமது புத்தக விற்பனைக்காக கரோல் கட்டுக்கதைகளை பரப்புகிறார் என்றும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.