உலகம்
இஷா புயலை அடுத்து Jocelyn புயல்: பயணத்திற்கும் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என எச்சரிக்கை
இஷா புயலை அடுத்து Jocelyn புயல்: பயணத்திற்கும் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என எச்சரிக்கை
பிரித்தானியாவில் இஷா புயல் மணிக்கு 107 மைல் வேகத்தில் புரட்டியெடுத்துள்ள நிலையில், தற்போது Jocelyn புயல் தொடர்பில் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் மணிக்கு 80 மைல் வேகத்தில் காற்று மற்றும் மழை ஏற்பட வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அம்பர் மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு மற்றும் மேற்கு ஸ்கொட்லாந்தில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 8 மணி வரை அம்பர் எச்சரிக்கை அமுலில் இருக்கும். மட்டுமின்றி மின்சாரம் தடைபடவும், தொலைபேசி இணைப்பு பாதிக்கப்படவும், கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படவும், போக்குவரத்து தாமதமாகலாம் என்றும், சாலைகள் மூடப்பட வாய்ப்பிருப்பதாகவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மிட்லாண்ட்ஸ், வேல்ஸ், வடக்கு அயர்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய பகுதிகளில் இன்று மாலை 4 மணி முதல் நாளை மதியம் 1 மணி வரை மஞ்சள் எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஸ்காட்லாந்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு ஸ்கொட்லாந்தில் இரவு 11 மணி முதல் காலை 9 மணி வரை பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஷா புயலாம் தடைபட்ட போக்குவரத்து தற்போது Jocelyn புயல் காரணமாக பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே, பிற்பகல் 3.30 மணிக்குப் பிறகு பிரஸ்டனுக்கு வடக்கே பயணிக்க வேண்டாம் என்று அவந்தி வெஸ்ட் கோஸ்ட் வாடிக்கையாளர்களை வலியுறுத்தியுள்ளது.
Jocelyn புயல் காரணமாக ரயில் சேவைகள் மொத்தமாக பாதிக்கப்படும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தேசிய ரயில் சேவை அறிவித்துள்ளது.