பதவி விலகினார் சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன்
சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதையடுத்து அவர் தனது பதவி விட்டு விலகியுள்ளார்.
அவர் மீது ஊழல் உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகளை அந்நாட்டு நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.
இதையடுத்து, அமைச்சர் பதவி விலகல் குறித்து பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இருப்பினும் தன் மீதான குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடமிருந்து இருந்து சுமார் 4 லட்சம் சிங்கப்பூர் டொலர் அளவுக்கு வெகுமதிகளை ஈஸ்வரன் பெற்றதாக ஊழல் தடுப்பு மற்றும் விசாரணை அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இதேவேளை கால்பந்து போட்டி, இசை நிகழ்ச்சி, சிங்கப்பூர் ஃபார்முலா 1 கிராண்ட் ப்ரீ டிக்கெட்டுகள் என பல சலுகைகளை ஈஸ்வரன் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
ஊழல், மோசடிகள் அற்ற ஆட்சி நடத்துவதாக சிங்கப்பூர் தெரிவித்து வருகின்ற நிலையில், அமைச்சர் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.