இரகசிய போர்… மாதம் பல மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் வாக்னர் கூலிப்படை
ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையினர் மேற்கு ஆபிரிக்காவில் இரகசியப் போரை நடத்தி, அதன் மூலம் மில்லியன் கணக்கான தொகையை சம்பாதிக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் இராணுவ ஆட்சிக்குழு ஆட்சிக் கவிழ்ப்பில் ஆட்சியைப் பிடித்த நிலையில், 2021ல் வாக்னர் கூலிப்படையினருக்கு அழைப்பு விடுத்தனர்.
இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிடவே வாக்னர் கூலிப்படையினர் மாலியில் களமிறக்கப்பட்டனர். உண்மையில், ஊழல் ஆட்சிக்கு ஆதரவாக அவர்கள் உழைத்தனர்.
இதன் பலனாக, மாதம் 8 மில்லியன் பவுண்டுகள் வரையில் வாக்னர் கூலிப்படையினர் சம்பளமாக பெற்றுள்ளனர். பாதுகாப்பு என்ற போர்வையில் வாக்னர் கூலிப்படையினர் கொடூரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவே கூறப்படுகிறது.
உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போர் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் வாக்னர் கூலிப்படையினர், மாலி மட்டுமின்றி, மேலும் பல ஆப்பிரிக்க நாடுகளில் பாதுகாப்பு அளிக்கும் போர்வையில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
மாலியில் உள்ள மோராவில் ஐந்து நாள் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதில் 500 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில், மாலி படைகள் மற்றும் வாக்னர் கூலிப்படையினரால் நடத்தப்பட்ட சட்டத்திற்கு புறம்பான கொலைகள் அவை என்று ஐ.நா மனித உரிமைகள் அமைப்பால் கண்டறியப்பட்டது.
மட்டுமின்றி, மூன்று தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதுடன் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவத்திலும் வாக்னர் கூலிப்படையினர் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் வாக்னர் கூலிப்படையின் பங்களிப்பு இருக்கும் பகுதிகளில் உள்நாட்டு கலவரங்கள், கொடூர வன்முறைகள் அதிகரித்திருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் மாலி அரசாங்கம் தங்களது நாட்டில் வாக்னர் படைகள் இருப்பதை மறுத்துள்ளது.