உலகம்
அவர் போர் குற்றவாளி… வெளிநாட்டு ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக சர்வதேச கைதாணை வெளியிட்ட பிரான்ஸ்
அவர் போர் குற்றவாளி… வெளிநாட்டு ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக சர்வதேச கைதாணை வெளியிட்ட பிரான்ஸ்
போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிரிய ஜனாதிபதி பஷர் அல்-ஆசாத் உட்பட நால்வருக்கு எதிராக பிரான்ஸ் நீதித்துறை அதிகாரிகள் சர்வதேச கைதாணைகளை பிறப்பித்துள்ளனர்.
குறித்த கைதாணையானது சிரியா ஜனாதிபதியின் சகோதரர் மற்றும் இரண்டு ராணுவ தளபதிகளுக்கு எதிராகவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டமாஸ்கஸ் புறநகர்ப் பகுதிகளில் 2013ல் நடத்தப்பட்ட இரசாயனத் தாக்குதல் உட்பட மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இவர்கள் முன்னெடுத்துள்ளதாக சிரியாவில் பாதிக்கப்பட்டவர்களின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ஆசாத் மட்டுமின்றி, அவரது சகோதரரும் 4வது கவசப் பிரிவின் தளபதியான மகேர் ஆசாத் மற்றும் இரண்டு சிரிய இராணுவ தளபதிகளான கசான் அப்பாஸ் மற்றும் பஸ்சம் அல்-ஹசன் ஆகியோருக்கு எதிராகவும் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்த கைதாணை தொடர்பில் பாரிஸ் சட்டத்தரணிகள் அலுவலகம் பகிரங்கமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. விசாரணை நடந்து கொண்டிருக்கும் வேளையில் பிரெஞ்சு சட்டத்தின் கீழ் கைதாணைகள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நால்வரும் கைது செய்யப்பட்டு, பிரான்ஸ் நாட்டில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றே இந்த வழக்கு தொடர்பான சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
2013 ஆகஸ்ட் மாதம் சிரியாவின் டூமா மற்றும் கிழக்கு கவுட்டா மீதான தாக்குதல்களில் 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த இரண்டு இரசாயன ஆயுத தாக்குதல்கள் தொடர்பான விசாரணை பிரான்சில் உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த தாக்குதலில் உயிர் தப்பியவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மார்ச் 2021ல் விசாரணை தொடங்கப்பட்டது. 2013 தாக்குதலை அடுத்து அப்போதைய பராக் ஒபாமா அரசாங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், ராணுவ நடவடிக்கை முன்னெடுக்க இருப்பதாகவும் மிரட்டியது.
ஆனால் இரசாயன ஆயுதங்களை ரஷ்யாவிடம் மொத்தமாக ஒப்படைப்பதாக ஆசாத் அரசாங்கம் உறுதி அளித்ததை அடுத்து சிரியா மீது நடவடிக்கை எடுப்பதை அமெரிக்கா கைவிட்டது.
இருப்பினும், ஆசாத் நிர்வாகம் இரசாயன தாக்குதலை தொடர்ந்தும் முன்னெடுத்ததாகவே கண்காணிப்பு அமைப்புகள் உறுதி செய்தது குறுப்பிடத்தக்கது.