உலகம்

என்னை வீழ்த்துவதற்காக வழக்கு, அமெரிக்க மக்கள் நம்ப மாட்டார்கள் – டிரம்ப் காட்டம்

Published

on

என்னை வீழ்த்துவதற்காக வழக்கு, அமெரிக்க மக்கள் நம்ப மாட்டார்கள் – டிரம்ப் காட்டம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப், சொத்துக்களின் மதிப்பை மிகைப்படுத்திக் கூறி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் நேரில் ஆஜரானார்.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் டொனால்டு டிரம்ப்.

நியூயார்க் நீதிமன்றத்தில் டிரம்ப் மீது ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அட்டர்னி ஜெனரல் லெடிடியா ஜேம்ஸ் வழக்குத் தொடர்ந்தார்.

அவர் மீது தனது சொத்துக்களின் மதிப்பை அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்திக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி ஆர்தர் எங்கோரான், முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது இரு மகன்களும் மோசடியில் ஈடுபட்டதை, கடந்த மாதம் 26ஆம் திகதி உறுதி செய்தார்.

இது ஒரு சிவில் வழக்கு என்பதால் டிரம்ப் நேரில் ஆஜராவது கட்டாயமில்லை. ஆனால் டிரம்ப் தாமாக முன்வந்து நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு எதிராக வாதாடிய லெடிடியா ஜேம்ஸ், மோசடி குற்றத்திற்காக டிரம்புக்கு 25 கோடி டொலர் அபராதம் விதிப்பதுடன், நியூயார்க்கில் தொழில் செய்ய அவருக்கு தடையும் விதிக்க வேண்டும் என்று கோரினார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்றது, தேர்தல் பிரச்சாரத்தின்போது பழைய ரகசியத்தை மறைப்பதற்காக நடிகைக்கு முறைகேடாக பணம் கொடுத்தது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளில் முகாந்திரங்கள் உள்ளதாக நீதிமன்றம் கூறியதைத் தொடர்ந்து, டொனால்டு டிரம்ப் நேரில் ஆஜராக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

அத்துடன் இந்த வழக்குகளினால் அவர் சிறை தண்டனையையும் எதிர்கொண்டுள்ளார். இந்த நிலையில் தான் டிரம்ப் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இந்த வழக்கு குறித்து டிரம்ப் கூறுகையில், ‘அரசியல் காரணங்களுக்காகவே என் மீது மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. என் மீதான பிற வழக்குகள் போலவே இந்த வழக்கும் சோடிக்கப்பட்டது.

அரசியலில் என்னை வீழ்த்துவதற்காக இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இருந்தாலும், இதனை அமெரிக்க மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்’ என தெரிவித்தார்.

Exit mobile version