உலகம்
இந்தியாவுக்கு எதிரான ஆதாரம் எவ்வளவு வலுவானதா? கனடா பிரதமர் பதில்
இந்தியாவுக்கு எதிரான ஆதாரம் எவ்வளவு வலுவானதா? கனடா பிரதமர் பதில்
கனடாவில், கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிராக எவ்வளவு வலுமான ஆதாரம் உள்ளது என கேட்கப்பட்ட கேள்விக்கு கனடா பிரதமர் நேரடியாக பதிலளிக்கவில்லை.
G 20 உச்சி மாநாட்டுக்காக இந்தியாவுக்குச் சென்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கனடாவில் காலிஸ்தான் அமைப்பினர் இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்துதல், தூதரக அதிகாரிகளுக்கெதிரான வன்முறை முதலான விடயங்கள் குறித்துப் பேச, கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
நாடு திரும்பிய ட்ரூடோ, கனடாவில் கொல்லப்பட்ட சீக்கியர் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.
அதைத்தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரி ஒருவரை, கனடாவிலிருந்து வெளியேற கனடா உத்தரவிட்டது. கனடா இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியதற்கு பதிலடியாக, கனேடிய தூதரக அதிகாரி ஒருவரை இந்தியா வெளியேற்றியது.
இந்நிலையில், நேற்று நியூயார்க்கில் ஊடகவியலாளர்களிடம் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மீண்டும் இந்தியா மீது குற்றம் சாட்டினார். நான் திங்கட்கிழமை கூறியதுபோல, கனேடியர் ஒருவர் கனடா மண்ணில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா உள்ளது என்பதை நம்புவதற்கு நம்பத்தக்க ஆதாரங்கள் உள்ளன என்றார்.
அப்போது ஊடகவியலாளர் ஒருவர், ட்ரூடோவிடம், இந்தியாவுக்கு எதிரான ஆதாரம் எவ்வளவு பெரியது, எந்த அளவுக்கு வலுவானது என்று கேள்வி எழுப்பினார்.
அந்த ஊடகவியலாளரின் கேள்விக்கு கனடா பிரதமர் நேரடியாக பதிலளிக்கவில்லை. கனடாவுக்கு கடுமையான மற்றும் சுதந்திரமாக செயல்படும் நீதி அமைப்பு உள்ளது. நீதித்துறையின் செயல்பாடுகளை செயல்படுத்தி உண்மைகளை வெளிக்கொணர, நாங்கள் நீதி அமைப்பை அனுமதிக்கிறோம் என்றார்.
இதற்கிடையில், கனடா பிரதமரின் பேட்டிக்கு சில மணி நேரம் முன்பு, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான Arindam Bagchi, எங்களுக்கு அளிக்கப்படும் எந்த குறிப்பிட்ட தகவலையும் பார்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், அப்படி எந்த தகவலும் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.