உலகம்
அதிகாரிகள் அனுப்பிய கடிதத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவன்
அதிகாரிகள் அனுப்பிய கடிதத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவன்
பிரான்சில், நிக்கோலஸ் (15) என்னும் சிறுவன், இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம், 5ஆம் தேதி, கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் துவங்கிய நிலையில், வகுப்பிற்குச் சென்ற ஒரு நாள் கழித்து தற்கொலை செய்து கொண்டான்.
பிரான்சின் Yvelines பகுதியிலுள்ள Poissy நகரில் படித்து வந்த நிக்கோலஸ் வம்புக்கிழுத்தலுக்கு ஆளாகியிருந்ததால், பாரீஸிலுள்ள புதிய பள்ளிக்கு மாறியிருந்தான், தான் முன்பு படித்த பள்ளியில் துன்புறுத்தப்பட்டதாக புகார் கூறியிருந்தான் அந்தச் சிறுவன்.
ஆனால், Yvelines பகுதி கல்வி அதிகாரிகள், நிக்கோலஸின் குடும்பத்தின் இக்கட்டான நிலைக்கு அனுதாபம் தெரிவிக்காமல், அவனது பெற்றோர் அனுப்பியுள்ள கடிதங்களில் கூறப்பட்டுள்ள விடயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனக் கூறி, அவர்களுக்கு ஒரு பதில் கடிதம் அனுப்பி, ஆக்கபூர்வமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியிருந்தார்கள்.
அத்துடன், அவதூறு பேசுவது பிரான்சில் குற்றச்செயல் என்றும், அதற்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 45,000 யூரோக்கள் வரை அபராதமும் விதிக்கப்படும் என்றும் மிரட்டும் விதத்தில் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தன்னால் குடும்பத்துக்கு ஏற்பட்ட தர்மசங்கடமான சூழ்நிலை கண்டு வருந்திய நிக்கோலஸ் தற்கொலை செய்துகொண்டான்.
அந்த மாணவனுக்கு அதிகாரிகள் அனுப்பிய கடிதம் மிகவும் வெட்கத்துக்குரிய விடயம் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் கல்வி அமைச்சரான Gabriel Attal.
அவரும், பிரான்ஸ் முதல் பெண்மணியுமாகிய பிரிஜிட் மேக்ரானும், மாணவன் நிக்கோலஸின் குடும்பத்தினரை சந்தித்த நிலையில், நான் வம்புக்கிழுத்தலுக்கு எதிராக போராடுவதை முன்னுரிமையாக ஆக்கியுள்ளேன். ஆனால். நாம் இன்னும் நமது இலக்கை அடையவில்லை என்று கூறியுள்ளார் Gabriel Attal.
இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி இரண்டு வாரங்களுக்குள் அறிகை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் பிரதமரான Elisabeth Borne, அந்தக் கடிதம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளதாகவும், ஏற்கனவே கவலையில் இருக்கும் பெற்றோருக்கு அதிகாரிகள் பதிலளித்த விடயத்தில் அவர்கள் தோற்றுப்போனதையே அது காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சராக சமீபத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானால் தேர்வு செய்யப்பட்ட Gabriel Attal, மேக்ரான் அரசில், குறிக்கோளுடன் செயல்படும் திறமையான அமைச்சராக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.