உலகம்

பிரான்சில் மாணவி தவறாக வீட்டுக்கு அனுப்பப்பட்டதால் வழக்கு தொடர முடிவு

Published

on

பிரான்ஸ் அரசு, கடந்த மாதம், பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் அபாயா (abaya) என்னும் உடலை மறைக்கும் அங்கியை அணிய தடை விதித்தது. அது கல்வியில் மதச்சார்பின்மை விதிகளை மீறுவதாகக் கூறி அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பள்ளிகளில் மதம் சார்ந்த, தலையில் அணியும் ஸ்கார்ப், கழுத்தில் அணியும் சிலுவை, தலையில் அணியும் கிப்பா என்னும் தொப்பி முதலான விடயங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அபாயாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், பள்ளி துவங்கிய முதல் நாள் அன்று, சுமார் 300 இஸ்லாமிய மாணவிகள் பள்ளிக்கு அபாயா அணிந்துவந்துள்ளனர். அவர்களில் பலர் அதை அகற்ற ஒப்புக்கொண்ட போதிலும், 67 மாணவிகள் அபாயாவை அகற்ற மறுத்துள்ளனர்.

ஆகவே, அவர்கள் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக பிரான்ஸ் கல்வி அமைச்சரான Gabriel Attal தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், Lyon நகரிலுள்ள பள்ளி ஒன்றிற்கு ஜப்பானிய உடையான கிமோனோ அணிந்து வந்த 15 வயது மாணவி ஒருவரும் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

மதம் சார்ந்த உடை எதையும் பள்ளிக்கு அணிந்து வரக்கூடாது என்று கூறி ஆசிரியர்கள் அந்த மாணவியை வீட்டுக்குப் போகச் சொல்ல, தான் அணிந்திருப்பது மதம் சார்ந்த உடை அல்ல என அந்த மாணவி கூறியதாக கூறப்படுகிறது.

ஆனாலும், ஆசிரியர்கள் அந்த மாணவியை வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளார்கள்.

ஆகவே, அந்த மாணவி சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் சட்டத்தரணியான Nabil Boudi, அந்த மாணவி ஜீன்ஸ், டி ஷர்ட் அணிந்து அதற்கு மேல், ஜப்பான் உடையான கிமோனோ என்னும் அங்கியை அணிந்து பள்ளிக்குச் சென்றதாகவும், ஆனால், பள்ளியின் தலைமையாசிரியை அந்த மாணவியை வீட்டுக்கு திருப்பி அனுப்பிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் வழங்கிய சமீபத்திய உத்தரவுகள் எத்தகைய அபாயகரமான விளைவுகளை உருவாக்கக்கூடும் என்பதற்கு ஆதாரமாக இந்த சம்பவம் உள்ளது என்று கூறியுள்ளார் Nabil Boudi.

Exit mobile version