காஸா மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு, சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 12 வயதுச் சிறுமி, சுமார் எட்டு மணி நேரத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காஸாவின் மத்தியப் பகுதியில் உள்ள ராகத் அல் அஷார் (Raghad al-Assar) என்ற அந்தச் சிறுமியின் வீடு, இஸ்ரேலியத் தாக்குதலில் தகர்க்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் ராகத்தின் இரண்டு சகோதரிகள் உட்படச் சிலர் உயிரிழந்தனர். ராகத் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் அவர் ‘உயிரிழந்துவிட்டார்’ என்று அறிவிக்கப்பட்டு, மற்ற உடலங்களுடன் சவக்கிடங்கில் வைக்கப்பட்டார்.
சுமார் எட்டு மணி நேரத்திற்குப் பின்னர், ராகத்தின் உடலை அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் தயாரானபோது, ராகத் உயிருடன் இருப்பது தெரியவந்தது.
காஸாவில் தொடரும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பொதுமக்கள், குறிப்பாகக் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ராகத் அல் அஷார் குறித்த தகவல் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட ஒரு குழந்தை சவக்கிடங்கிலிருந்து மீட்கப்பட்ட நிகழ்வு, போரின் மத்தியில் சுகாதார அமைப்புகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சந்திக்கும் சவால்களையும், துயரங்களையும் வெளிப்படுத்துவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

