வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீதான தாக்குதலில், அமெரிக்கப் படைகள் ‘Discombobulator’ என்ற மர்மமான ரகசிய ஆயுதத்தைப் பயன்படுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் வெனிசுலாவில் நடத்தப்பட்ட இந்த அதிரடித் தாக்குதலில், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ் ஆகியோர் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் தற்போது அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு, போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் குறித்து டொனால்ட் ட்ரம்ப் அளித்துள்ள விளக்கத்தில் இந்த நவீன சாதனம் வெனிசுலாவின் முழுப் பாதுகாப்பு கட்டமைப்பையும் நிலைகுலையச் செய்தது.
வெனிசுலாவிடம் இருந்த ரஷ்யா மற்றும் சீனத் தயாரிப்பு ரொக்கெட்டுகள் எதுவும் இந்த ஆயுதத்தின் தாக்கத்தால் வேலை செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் இந்த ஆயுதம் குறித்துப் பேசினாலும், அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பென்டகன் (Pentagon) அத்தகைய பெயரில் எந்த ஆயுதமும் உத்தியோகபூர்வமாக இல்லை எனத் தெரிவித்துள்ளது. இது ஒரு Directed-Energy Weapon (DEW) அல்லது மேம்பட்ட Electronic Warfare (EW) வகையைச் சேர்ந்த ஆயுதமாக இருக்கலாம் எனப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தத் தாக்குதலானது லத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தில் மிகப்பெரிய அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் புதிய ரகசிய ஆயுதம் குறித்த விவாதங்கள் உலக அரங்கில் சூடுபிடித்துள்ளன.